செவ்வாய், 14 நவம்பர், 2017

குழந்தைகள் தினவிழா


இன்று 14.11.2017ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் குழந்தைகள் தினவிழா  நடைபெற்றது.
     பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னதாக  பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் தனது தலைமை உரையில் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் முன்னாள் இந்திய பிரதமர் பண்டிட் ஜவகர்லால் நேரு பிறந்தநாள், குழந்தைகள் தினவிழாவாக கொண்டாதுவது பற்றி எடுத்துக் கூறி அவரின் வாழ்க்கை, நாட்டு சுதந்திரத்திற்கு அவர் செய்த சேவைகள் பற்றியும் எடுத்துக் கூறினார். மேலும் சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர் ஏற்படுத்திய பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் பற்றியும் விளக்கினார்.
அடுத்து பள்ளி மாணவர்கள்  குழந்தைகள் தினவிழா தொடர்பாக  எனக்குப் பிடித்த நேரு மாமா என்ற தலைப்பில் தமது கருத்துக்களை பேச்சு, கவிதை மூலம் வெளிப்படுத்தினர்.
பின்னர் பல்வேறு போட்டிகளில் பள்ளி அளவிலும், குறுவள மைய அளவிலும், ஒன்றிய , மாவட்ட அளவிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் சிறப்பு பரிசுகள் பள்ளித் தலைமை ஆசிரியரால் வழங்கப்பட்டது. மேலும் பள்ளியில் மரம் வளர்ப்பு, தோட்டம் பராமரிப்பு ஆகியவற்றில் சிறப்பாக செயல்படும்  10 மாணவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் அளிக்கப்பட்டன.
பின்னர் அனைத்து மாணவர்களுக்கும் பாரம்பர்ய மற்றும் இயற்கை சத்துக்கள் அதிகம் நிரம்பிய கடலைகொட்டை, வெல்லம் கலந்த இனிப்பும், எழுது பொருட்களும் வழங்கப்பட்டது
விழாவில் உதவி ஆசிரியர் திருமதி திலகா வாழ்த்துரை வழங்கினார்.
இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல் அனைவருக்கும் நன்றி கூறினார்.  


















































வியாழன், 9 நவம்பர், 2017

குறுவள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி


ஊத்தங்கரை ஒன்றியம் கெங்கபிராம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று (08.11.2017) குறு வள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
அனைவருக்கும் கல்வி இயக்கம், இராஷ்டிரிய அவிஸ்கார் அபியான் திட்டம் சார்பிலான அறிவியல் கண்காட்சி ”தேசிய வளர்ச்சியில் புத்தாக்க புனைவுத் திட்டம் மற்றும் நிலையான வளர்ச்சியில் புதுமைகளின் பங்கு” என்ற தலைப்பில் மாநிலம் முழுதும் நடைபெற்று வருகிறது அதன்படி கெங்கபிராம்பட்டி குறு வளமையம் சார்பில் இன்று நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை, முன்னதாக காலை 10 மணிக்கு ஜோதிநகர் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார். இதில் இம்மையத்தைச் சார்ந்த 4 துவக்கப் பள்ளிகள், 4 நடுநிலைப் பள்ளிகள் ஒரு உயர்நிலைப் பள்ளி என மொத்தம் 9  பள்ளிகள் பங்கு பெற்றன. அதில் மாணவர்களால் தயாரிக்கப்பட்ட 65 இயங்கும் மாதிரிகளும், 50க்கும் மேற்பட்ட இயங்கா மாதிரிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.
அதில் அனைவரையும் கவர்ந்த மாதிரிகள் உப்பாரப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களால் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
பிற்பகல் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற  பரிசளிப்பு விழாவில் ஆசிரியப் பயிற்றுநர் திரு ப. சிவப்பிரகாசம் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக அனைவருக்கும் கல்வித் திட்ட மாவட்டப் பொறியாளர் திரு ப. சரவணன் அவர்கள் கலந்துக் கொண்டு மாணவர்களைப் பாராட்டினார்.
விழாவில் துவக்கப் பள்ளிகள் சார்பில் மண்ணாண்டியூர், தாண்டியப்பணூர், அப்பிநாயகன்பட்டி, நாப்பிராம்பட்டி பள்ளிகளுக்கும், உயர் துவக்க நிலைப் பள்ளிகள் சார்பில் உப்பாரப்பட்டி, ஜோதிநகர், நாப்பிராம்பட்டி, கெங்கபிராம்பட்டி  பள்ளிகளுக்கும் முதல், இரண்டு மூன்று பரிசுகளும் ஒட்டுமொத்த படைப்புகளுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டது.
விழாவில் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும், உதவி ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.

இறுதியில் கெங்கபிராம்பட்டி பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி மா. அனுசுயா அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.  ,